மும்பை,மும்பையைச் சேர்ந்த பிரபல தாதா, பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட கொசுக்களுடன் கோர்ட்டுக்கு வந்து, ‘சிறையில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. தயவு செய்து கொசு வலை கொடுக்க உத்தரவிடுங்கள்’ எனக் கதறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நிழல் உலக தாதாவாக விளங்கிய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இஜாஜ் லக்டாவாலா.
இவர் மீதும் பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. 2020ல் கைது செய்யப்பட்ட இவர், நவி மும்பையில் உள்ள டலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் கொசுத் தொல்லை இருப்பதால், தனக்கு கொசு வலை வழங்க உத்தரவிடும்படி செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜாரன இஜாஜ், கையில் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தார். அதில், 100க்கும் மேற்பட்ட இறந்த கொசுக்கள் கிடந்தன. அந்த பாட்டிலை நீதிபதியிடம் காட்டிய இஜாஜ், ”சிறையில் துாங்க முடியாமல் சிரமப்படுகிறேன். அதை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்தகொசுக்களை எடுத்து வந்தேன்,” என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பாதுகாப்பு காரணங்களுக்காகவே கொசு வலை வழங்கவில்லை என போலீசார் கூறுகின்றனர். இதில் நியாயம் உள்ளது.
சிறையில் கொசு தொல்லை இருந்தால், அதற்கான திரவங்களை தடவலாம் அல்லது வேறு வழிகளில் கொசுக்களை விரட்டலாம். கொசு வலை வழங்குவது பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, கொசு வலை வழங்கும்படி கோரிய இஜாஜின் கோரிக்கையை நிராகரித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement