தமிழ்நாட்டில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்தத் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த விவகாரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது எனக் கூறி அனுமதி தர மறுத்த தமிழக அரசு, பின்னர் நவம்பர் 6-ம் தேதி பேரணி நடத்தலாம் என கூறியது. அதிலும் நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த 50 இடங்களில், 3 இடங்களில் மட்டுமே பேரணி நடத்தலாம் என அரசு தரப்பு வாதிட்டது.
பின்னர் இதனை ஆர்.எஸ்.எஸ் மறுத்ததையடுத்து, `கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி’ ஆகிய ஆறு இடங்களைத் தவிர்த்து, 44 இடங்களில் பேரணி நடத்தலாம் என நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் நாளை நடைபெறவிருந்த பேரணியை ஒத்திவைப்பதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து, ஆர்.எஸ்.எஸ்-ஸின் தென்மண்டல தலைவர் இரா.வன்னியராஜன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6-ல் நடத்தக் கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6-ம் தேதி அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்கோ நடத்துமாறு நீதிமன்றம் கூறி இருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. நாங்கள் சட்டரீதியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால் நவம்பர் 6-ம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டியிருக்கிறது.