சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் காலமானார்!

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி காலமானார். அவருக்கு வயது 105. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது தீராத நம்பிக்கை கொண்ட ஷியாம் சரண் நேகி மறைவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. “தேசத்திற்கான அவரது சேவைக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என்று தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான இந்தியர்களை வாக்களிக்க தூண்டிய அவர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி, உயிரிழப்பதற்கு முன்பு கடந்த 2ஆம் தேதி தபால் வாக்கு மூலம் தனது வாக்கினை அவர் செலுத்தியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி, உயிரிழப்பதற்கு முன்பே தபால் வாக்கு மூலம் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். இது அவர் வாக்களித்த 34ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் ஆகும்.

நாடு சுதந்தரம் அடைந்த பிறகு முதல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 1952ஆம் ஆண்டு ஜனவரி – பிப்ரவரியில் நடைபெற்றது. அந்த சமயத்தில், இமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தில் கடும் மழையும், பனிப்பொழிவும் இருக்கும் என கருதப்பட்டதால், அதாவது 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதியன்று அங்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது நடந்த வாக்குபதிவில், கின்னோர் மாவட்டத்தின் கல்பா கிராமத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி முதல் வாக்காளராகச் சென்று வாக்களித்து தனது ஜனநாயக் கடமையை ஆற்றினார்.

இதன்மூலம், சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமையை அவர் பெற்றார். அன்று முதல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் ஷியாம் சரண் நேகி தவறாமல் வாக்களித்து வந்தார். இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொண்டு தபால் வாக்கு செலுத்த விருப்பமா என கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த ஷியாம் சரண் நேகி, வாக்குச்சாவடிக்கு நேரில் சென்றே வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தபால் வாக்கு செலுத்த அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்து, தபால் வாக்கினை அவர் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.