போபால்: மத்திய பிரதேசத்தில் பூங்காவில் உள்ள நமீபியா சிவிங்கி புலிகளை வனப்பகுதிக்குள் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிவிங்கி புலிகள் கடந்த 1952ம் ஆண்டுடன் அழிந்து விட்டதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனை மீண்டும் இந்தியாவில் இனப்பெருக்கம் செய்வதற்காக நடவடிக்கை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக, நமீபியாவில் இருந்து 5 பெண், 3 ஆண் என மொத்தம் 8 சிவிங்கி புலிகள் தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய உயிரியல் பூங்காவுக்கு எடுத்து செல்லப்பட்ட இவற்றை, கடந்த செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடி தனது பிறந்த நாளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் திறந்து விட்டார். இந்நிலையில், இந்த சிவிங்கி புலிகள் இந்தியா வந்து இன்றுடன் 50 நாட்களாகும் நிலையில், தற்போது அவை இந்திய சுற்றுச்சூழலை ஏற்று வாழ்வதற்கான நிலையை அடைந்துள்ளன. இதனால், முதல் கட்டமாக அவற்றை 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதிக்கள் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் இந்திய சூழலை நன்கு பழகிக் கொண்டுள்ள ஒரிரு சிவிங்கி புலிகள் மட்டுமே இன்று வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அவை எப்படி அந்த சூழலில் வாழ்கின்றன என்பதை பொருத்து, மற்ற சிவிங்கி புலிகளும் படிப்படியாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என அவற்றை கண்காணிக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.