நிலக்கோட்டை: பொதுமக்கள் அதிகம் கூடும் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மூடிக்கிடக்கும் பொதுக்கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேளாண்மை அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அலுவகங்கள் அமைந்துள்ளன. இந்த ஒருங்கிணைந்த அலுவலக வளாகப் பகுதியில் இதர அலுவலகங்களுக்கு தினமும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்காக கட்டப்பட்ட சிறிய அளவிலான கழிப்பறை கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டுள்ளது.
இதனால் தினமும் அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த அலுவலகப் பகுதியில் பொதுமக்களுக்காக வேறு கழிப்பறைகள் இல்லாததால் சிலர் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் இதுபோன்ற செயல்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த கழிபறையை உடனடியாக புனரமைப்பு செய்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்துள்ளனர்.