புதுடெல்லி: டெல்லியில் நிலவும் காற்று மாசினை போக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், அவரது கவனம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் இலவசங்களை அறிவிப்பதில்தான் இருக்கிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லியில் உள்ள மக்கள் உடனடியாக முகக்கவசம் அணிந்து காற்று மாசிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அரவிந்த் கெஜ்ரிவால், இமச்சலப் பிரதேசம், குஜராத் தேர்தல் தொடர்பாக இலவசங்களை அறிவிப்பதிலும், டெல்லியிலுள்ள வரிசெலுத்துவோரின் பணத்தில் விளம்பரம் செய்வதிலுமே தீவிரமாக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக்குறியீடு 400 க்கும் அதிகமாக சென்று காற்று சுவாசிக்க தகுதியற்றது என்ற நிலையில் மோசமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களின் தீவிரத்தைத் தொடர்ந்து டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ.5) முதல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 50 சதவீதம் பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படியும் மாநில அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
சனிக்கிழமை காலையில் டெல்லியின் காற்று மாசு தீவிரமடைந்திருந்தது. சமீபகாலமாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஒரு முக்கிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. பஞ்சாப்பின் பண்ணைக்கழிவுகளைத் தீயிட்டுக் கொளுத்துவது உள்ளிட்ட சில காரணங்களால் காற்று மாசு அதிகரிப்பதற்காக செல்லப்படுகிறது.
दिल्ली की जनता से आग्रह है की मास्क पहनें और वायु प्रदूषण से स्वयं की रक्षा करें क्योंकि केजरीवाल जी गुजरात और हिमाचल में मुफ्त की रेवड़ी से जुड़े वादे करने और दिल्ली की जनता के टैक्स के करोड़ों रुपयों के खर्चे से विज्ञापन देने में व्यस्त हैं। https://t.co/gSmw4yvv6G
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) November 4, 2022