சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை பலியான 26 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருமழையின் தாக்கம் தொடர்பாக தமிழ்நாடு வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நேற்று (நவ.5 ) 37 மாவட்டங்களில் 10.04 மி.மீ மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 45.93 மி.மீ. பெய்துள்ளது. நேற்று சென்னை மாவட்டத்தில் 2 மனித உயிரிழப்புகளும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பும் ஆக மொத்தம் 3 மனித உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 25 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது.140 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று வரை சென்னை மாநகராட்சி பகுதிகளில் 64 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 763 மேட்டார் பம்புகள் தயாராக உள்ளது. மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் 250 மேட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2 நிவாரண மையங்களில் 35 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 394 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 244 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 150 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 206 தொலைபேசி அழைப்புகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், 132 அழைப்புகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் 21.03 அடி நீர் உள்ளது. செம்பரம்பாக்கத்திற்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 539 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியில் 18.80 அடி நீர் உள்ளது. 373 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.