வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பகுதியில் போதிய மழை பெய்துள்ளதால் நெல் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்கு உணவு தேடி கொக்குகள் படையெடுத்து வருகின்றன. வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி ஊராட்சி பண்ணைப்பட்டி பகுதியில் தற்போது நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அதிக அளவில் நெல் விவசாய நடந்து வருகிறது. இப்பகுதியில் வருடந்தோறும் வாழை, தக்காளி, மிளகாய், பருத்தி போன்றவற்றை அதிக அளவில் விவசாயம் செய்வார்கள். தற்போது இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் கண்மாய் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது.
இதற்கிடையே தற்போது தொடர்ந்து மழை பெய்வதால் வாழை, தக்காளி, மிளகாய் உள்பட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தற்போது அதிக அளவில் நெல் விவசாயத்திற்கு ,மாறி உள்ளனர். இப்போது இப்பகுதிகளில நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கு போதிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
நிலம், நாற்று, தண்ணீர் எல்லாம் தயாராக இருந்தும் விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே பல்வேறு பகுதிகளில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் நாற்று நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோல் நடவு பணிகளுக்கு முன் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி தொழியடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அப்போது வெளியேறும் மண்புழுக்களை உண்ண இப்பகுதியில் கொக்குகள் கூட்டம் படையெடுத்துள்ளது. விவசாய நிலங்களில் கொக்குகள் கூட்டம், கூட்டமாக அமர்ந்து தங்கள் உணவான மண் புழுக்களுக்காக காத்திருக்கும் காட்சி காண்போர் கண்களை கவர்கிறது.