சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வளிமண்டல சுழற்றி காரணமாகவே மழை பெய்து வருவதாகவும், உண்மையான பருவமழை 9ந்தேதிக்கு பிறகே தெரியும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09.11.2022 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும்.
மேலும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ( 05.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கத்துள்ளது.