பருவ மழை நேரத்தில் மக்கள் மீது அக்கறை இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தி ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிடுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பருவ மழை தொடங்கி இருக்கக்கூடிய நிலையில், பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளில் மருத்துவ முகாம் தொடங்கி இருக்கிறது. வடசென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது…
சென்னையில் மழைநீர் தேக்கம் 98 சதவீதம் பணி முடிந்து பாதிப்பு இல்லாமல் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. ஒரு சில இடத்தில் இருக்கும் தண்ணீர் கூட இன்று நண்பகல் வெளியேற்றப்படும். அதேபோல் இன்று மருத்துவ முகாம் தொடங்கப்பட்டு இருக்கிறது. மாநகராட்சி, சுகாதாரத் துறை இணைந்து பொதுமக்கள் பயன்பெற நடத்தப்படுகிறது.
கொளத்தூர் தொகுதியில் நேற்று நடந்த மெகா முகாமில் 900 மக்கள் பயனடைந்தனர். வரும் 9 ஆம் தேதி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அரசு தயராகி வருகிறது. கடந்த ஆண்டு பாதித்த வால்டாக்ஸ் சாலை, எழும்பூர் தமிழ்சாலை பகுதியில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. 2 ஆம் கட்ட மழைநீர் வடிகால் பணிகளை ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறோம். இனி அடுத்த ஆண்டு சென்னையில் எந்த பாதிப்பும் இருக்காது.
சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். இதில், உடனடியாக தற்காலிக சாலை சீரமைப்பு பணிகள் மற்றும் பருவமழை முடிந்த பிறகு சாலைகள் முழுக்க சீரமைக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். பழமையான கட்டடம் சில பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. அந்த பகுதியில் மக்கள் செல்ல வேண்டாம் என மாநகராட்சி மூலம் அறிவுறுத்தி இருக்கிறோம்.
மக்களை பற்றி அக்கறை இல்லாமல், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தி கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றனர். ஆனால், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முதல்வர் அனைத்து முடிவும் எடுப்பார். இந்த நிகழ்வில் மேயர் பிரியா, திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம்.கவி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM