திருவனந்தபுரம்: கல்லூரி மாணவர் ஷாரோனை கொலை செய்ததற்கு மூடநம்பிக்கை தான் காரணம் என்று அவரது பெற்றோர் தெரிவித்திருந்ததால், அது உண்மைதானா? என்று கண்டறிவதற்காக கிரீஷ்மா, அவரது தாய் மற்றும் மாமாவிடம் ஒன்றாக விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர். குமரி மாவட்டம், நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது காதலி கிரீஷ்மா, தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். சிந்து மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் 5 நாள் போலீஸ் காவலிலும், கிரீஷ்மா 7 நாள் போலீசில் காவலிலும் உள்ளனர்.
இவர்கள் 3 பேரும் திருவனந்தபுரம் எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று முதல் 3 பேரிடமும் ஒன்றாக விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். கிரீஷ்மாவுக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம் நடந்தால் முதல் கணவர் மரணமடைவார் என்று ஒரு ஜோதிடர் கூறியதாகவும், அதனால்தான் தங்களுடைய மகனை திருமணம் செய்து, அதன் பின்னர் அவரை கிரீஷ்மா கொலை செய்ததாகவும் ஷாரோனின் பெற்றோர் போலீசில் தெரிவித்திருந்தனர்.
இது உண்மைதானா? என கண்டுபிடிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். மூன்று பேரையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தினால் இது தொடர்பான தகவல் தெரியவரும் என்று போலீசார் கருதுகின்றனர். இதற்கிடையே வழக்கை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து கூடுதலாக சட்ட ஆலோசனை பெற குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்துள்ளனர்.