திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 7ம் தேதி அன்னாபிஷேக விழா தரிசன நேரத்தில் மாற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 7ம் தேதி மாலை 4.44 மணிக்கு தொடங்கி, 8ம் தேதி மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 7ம் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று, சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அதேநாளில், பவுர்ணமி கிரிவலமும் அமைந்திருப்பதால், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தரிசன நேரம் மற்றும் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அண்ணாலையார் கோயிலில் 7ம் தேதி மற்றும் 8ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் மட்டும் வழக்கம் போல அனுமதிக்கப்படும். நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ஒற்றை வழி வரிசை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

அண்ணாமலையார் கோயிலில் வரும் 7ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. சுவாமிக்கு அன்னம் சாத்தும்போது, பக்தர்கள் அதை தரிசிக்க அனுமதிக்கும் வழக்கம் அண்ணாமலையார் கோயிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்னம் சாத்தப்பட்ட பிறகே, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

சந்திர கிரகணத்திலும் தரிசனம்
வரும் 8ம் தேதி பகல் 2.38 மணி முதல் மாலை 6.19 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ஆன்மிக மரபின்படி, கிரகண நேரங்களில் கோயில் நடை அடைக்கும் வழக்கம் இல்லை. எனவே, வரும் 8ம் தேதி வழக்கம் போல கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். சந்திர கிரகணம் முடியும் நேரத்தில், கோயில் 4ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.