விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தில் பாண்டியன் நகர் உள்ளது. இந்தப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரத்தை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குழந்தைகளின் கல்வி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்பட பல்வேறு அரசு ஆவணங்களிலும் பாண்டியன் நகர் என்ற முகவரியிலேயே அடையாள அட்டைகளை பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், மேட்டமலை ஊராட்சித் தலைவராக தற்போது பொறுப்பில் உள்ள பார்த்தசாரதி என்பவர், பாண்டியன் நகர் பகுதியின் பெயரை அம்பேத்கர் நகர் என மாற்றியதாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாண்டியன் நகர் பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அம்பேத்கர் நகர் என்ற பெயரை திரும்ப பெற வலியுறுத்தியும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துத்தர வலியுறுத்தியும் வீடுகளில் கருப்புக்கொடிக்கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பாண்டியன் நகர் பொதுமக்கள் பேசும் போது, “எங்களது பகுதியின் பெயரை அம்பேத்கர் நகர் மாற்றியது ஏன்? என விளக்கம் கேட்பதற்காக ஊராட்சி மன்ற தலைவரை அணுகினால் எங்களை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்துகிறார். எங்களது வசிப்பிட பகுதியின் பெயரை மாற்றியது ஊராட்சித்தலைவரின் தன்னிசையான முடிவு. இதனால் நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறோம். இதுவரை தாங்கள் பெற்றுள்ள குடும்பஅட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உட்பட குழந்தைகளின் ஆவணங்கள் என அரசு சார்ந்த அனைத்து அடையாள அட்டைக்கும், சான்றிதழுக்கும் பெயர் மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல்வேறு குளறுபடிகள் உருவாகும் என்பதால் இனியும் புதிதாக எந்த ஆவணங்களையும் பாண்டியன் நகர் என்ற முகவரியில் பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருக்கிறோம். ஆனால் எங்களது மனுவின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே அடிப்படை வசதி குறைபாட்டால் அல்லல்படும் நாங்கள், தற்போது பெயர் மாற்ற நடவடிக்கையால் இன்னும் சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே, பாண்டியன் நகர் மக்களின் நிலையை புரிந்துக்கொண்டு, பெயர் மாற்ற நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும், மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்” என்றனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேட்டமலை ஊராட்சித் தலைவர் பார்த்தசாரதியிடம் பேசினோம், “1999-லேயே அந்தப்பகுதி பாண்டியன் நகர் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டு அப்போதைய ஊராட்சி மன்றத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அந்தப்பகுதியின் பெயரை அம்பேத்கர் நகர் என மாற்றும் அவசியம் ஊராட்சிக்கு ஏற்படவில்லை. மேலும், பொதுமக்களை நான் தரக்குறைவாக பேசியதாக சொல்வதில் உண்மையில்லை. மக்களோடு தினமும் தொடர்பில் இருப்பவன் நான். பொது இடத்தில் எப்படி மரியாதையாக நடந்துகொள்ளவேண்டும் என்ற பக்குவமும் எனக்கிருக்கிறது. எனவே, பாண்டியன் நகர் பகுதி மக்களை நான் அவமானப்படுத்தி பேசியதாக சொல்வது உண்மையில்லை. அப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, தெருவிளக்கு, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். வீடுகள் ஆங்காங்கே இருப்பதாலும், சுற்றிலும் விவசாய பட்டா நிலங்கள் இருப்பதாலும் கழிவுநீரோடை அமைக்கும் பணி மட்டும் தாமதப்படுகிறது. விரைவில் அந்தப்பணியும் நிறைவேற்றிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (பஞ்சாயத்து) பேசும் போது, “ஒரு பகுதியின் பெயரை மாற்றும் அதிகாரம் பஞ்சாயத்திற்கு கிடையாது. வளர்ச்சி பணிகள் சார்ந்து பணி நடைபெறும் இடத்தில் பணிவிளக்க பலகை வைக்கப்படுவது வழக்கம். அதுபோலத்தான், பாண்டியன் நகர் பகுதியில் வளர்ச்சிப்பணி சார்ந்து வைக்கப்பட்ட விளக்க பலகையில் அம்பேத்கர் நகர் என தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பினை தொடர்ந்து அந்தப்பலகை அகற்றப்பட்டுவிட்டது. மேலும், அப்பகுதி மக்களின் தேவையை அறிந்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.