சென்னை: எழும்பூர் தமிழ்ச்சாலையில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி இரவோடு இரவாக ரெடிமேட் குழாய்களை அமைத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதில், எழும்பூர் தமிழ்ச்சாலையில் அதிக அளவு மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த தண்ணீர் 2 மோட்டார்கள் கொண்டு வெளியேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த சாலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், நேற்று ஒரேநாள் இரவில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு சாலையில் பள்ளம் தோண்டி ரெடிமேட் குழாய்கள் கட்டமைப்பை உருவாக்கினர். இதன்படி, எழும்பூர் தமிழ்ச்சாலையில் காவல் ஆணையர் அலுவலக சாலையின் சந்திப்பில் இருந்து 30 மீட்டர் நீளத்திற்கு ரெடிமேட் குழாய்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ளன.
மழை நீரானது இந்தக் குழாய்கள் மூலம் தமிழ்ச்சாலையில் இருந்து காவல் ஆணையர் அலுவலகம் சாலையின் வடிகாலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்த கூவம் ஆற்றில் மழைநீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தப் பகுதியில் நீண்ட நேரம் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.