மாண்டி (இமாச்சலப் பிரதேசம்): பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது காங்கிரஸ் கட்சியின் வாடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான இமாச்சலப் பிரதேசத்தின் ஷியாம் சரண் நேகி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்தேன். அவர் தனது 106-வது வயதில் உயிரிழந்திருக்கிறார். முன்னதாக, தபால் வாக்கு மூலம் தனது வாக்கினை கடந்த 2-ம் தேதி அவர் செலுத்தி இருக்கிறார். உயிர் விடுவதற்கு முன் அவர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார். இது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் தர வேண்டும்.
இம்முறை இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தல் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இம்முறை நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கானவை. பாஜக என்றால் நிலையான அரசு; வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அரசு என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என்ற முடிவை அவர்கள் எடுத்துவிட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பது அதன் வாடிக்கை. மக்களை ஏமாற்றுவதற்கான காங்கிரசின் மிக நீண்ட கால உத்தி இது. இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் முன்னுரிமை கொடுத்தது கிடையாது. ஆனால், பாஜக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறது.
நாங்கள் இலவசமாக தடுப்பூசி வழங்கினோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், இமாச்சலப் பிரதேசத்திற்கு இறுதியாகத்தான் தடுப்பூசி கிடைத்திருக்கும். கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது நீங்கள் சரியாக வாக்களித்தீர்கள். அதன் காரணமாகவே இமாச்சலப் பிரதேசத்தில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன” என்று அவர் பேசினார்.