சிக்கிம்: இரண்டு நாள் சுற்று பயணமாக சிக்கிம் சென்றுள்ள, ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிக்கிம் அரசால், அவருக்கு வழங்கப்பட்ட குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் மனைவி மற்றும் நடனப் பெண்களுடன் இணைந்து பழங்குடியினரின் நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டு நாள் சுற்று பயணமாக சிக்கிம் சென்றுள்ளார். இந்நிலையில் சிக்கிம் அரசால், அவருக்கு வழங்கப்பட்ட குடிமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேங்டாக்கில் கல்வி, சுகாதாரம், சாலை உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியவதாவது:
கிழக்கு இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள சிக்கிம், இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள அடர்ந்த காடுகள், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், அழகான ஏரிகள் அனைத்தும் சிக்கிமின் இயற்கை அழகை மேலும் பெருமைப்படுக்கிறது.
சிக்கிம் பல்வேறு சமூகங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமான எழுத்தறிவு விகிதத்தைக் கொண்ட சிக்கிம், கல்வியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.
உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. சிக்கிமில் ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாக இருக்கிறது. இது சிக்கிம் மக்களின் கல்வியில் உள்ள முன்னுரிமையை காட்டுகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும், சிக்கிம் மாநிலத்தில்தான் பிளாஸ்டிக் கழிவுகள் குறைவு.
சிக்கிம் மக்களின் தூய்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. தூய்மையை மற்ற மாநிலங்களில் உள்ளவர்களும், சிக்கிம் மக்களின் தூய்மையை பின்பற்றலாம்.
இயற்கை விவசாயத்தின் முன்மாதிரியாக சிக்கிம் மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் பயன்படுத்துவதை தடை செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் நட்பு வளர்ச்சிக்கான புதிய தரங்களை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
‛‛ நடனம் ஆடும் ஜனாதிபதி திரவுபதி முர்மு”:
இதையடுத்து, அம்மாநில முதல்வர் மனைவி மற்றும் நடனப்பெண்களுவடன் இணைந்து பழங்குடியினரின் நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement