காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கும் விதமாக `பாரத் ஜோடோ’ எனும் பெயரில் நடைபயண யாத்திரை மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையை விளம்பரப்படுத்துதலில் அனுமதியின்றி, `கே.ஜி.எஃப்-2′ படத்தின் ஹிந்தி பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக, படத்தின் மியூசிக் உரிமையைப் பெற்றிருக்கும் எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம், ராகுல் காந்தி உட்பட 3 பேர் மீது புகாரளித்திருக்கிறது.
இதுகுறித்து, மியூசிக் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் நரசிம்மன் சம்பத், `திரைப்படம் தொடர்பான பாடல்களைச் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து காங்கிரஸ் ஒரு வீடியோவை உருவாக்கியிருக்கிறது. அந்த வீடியோவில் அவர்கள் பாரத் ஜோடோ யாத்ரா என்ற லோகோவையும் பயன்படுத்தியிருக்கின்றனர். மேலும் அதைத் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களிலும் ஒளிபரப்பியிருக்கின்றனர்.
எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் வைத்திருக்கும் ஒரே சொத்து அதன் பதிப்புரிமை (copyright) தான், எனவே நிறுவனம் தன்னுடைய சட்டப்பூர்வ உரிமைகளை அமல்படுத்துவதற்காக மட்டுமே புகார் அளித்திருக்கிறது. இதில் அரசியல் கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் எந்தவொரு நோக்கமும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து மியூசிக் நிறுவனத்தின் புகாரின்பேரில், பதிப்புரிமை, தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள் மற்றும் ஐபிசி பிரிவுகள் 120பி, 403, 465 ஆகியவற்றின் கீழ், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வழக்கு பதிவில், மூன்றாவது குற்றவாளியாக ராகுல் காந்தி பட்டியலிடப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.