நடைபயணத்தில் சினிமா பாடலை பயன்படுத்திய புகார்; ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மீது வழக்கு: கர்நாடகா போலீசார் நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்ற நடைபயணத்தின் போது விதிமுறைகளை மீறி சினிமா பாடலை பாடிய புகாரின் அடிப்படையில் ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை முடித்துக் கொண்டு தற்போது தெலங்கானானில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்ட போது, அனுமதியின்றி ஒரு திரைப்படத்தின் இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதையடுத்து பெங்களூரைச் சேர்ந்த மியூசிக் ரெக்கார்டிங் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், ராகுல் காந்தி மற்றும் இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் மீது பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘எம்ஆர்டி மியூசிக் நிறுவனத்தின் வணிக பங்குதாரரான நவீன் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், பதிப்புரிமை மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகள் மற்றும் ஐபிசி பிரிவுகள் 120பி, 403, 465 ஆகிய பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி  ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் பிரிவு தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மியூசிக் ரெக்கார்டிங் நிறுவனத்தின் சம்மதத்தைப் பெறாமல், அவர்கள் தங்கள் விளம்பர வீடியோக்களில் குறிப்பிட திரைப்படத்தின் இசையைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது’ என்றனர். ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், ‘கன்னட நடிகர் படத்தில் வரும் பாடலை சட்டவிரோதமான முறையில் தங்களது பிரசாரத்தில் காங்கிரஸ் பயன்படுத்தி உள்ளது. அதையடுத்து அவர்கள் மீது வழக்குபதியப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.