குன்றத்தூர்: காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 4 தினங்களுக்கு முன்பு இந்த ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து மழைநீர் வரத்து உள்ளதாலும், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாலும் உபரிநீர் திறப்பதை 500 கன அடியாக உயர்த்த கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் இன்று காலை 10 மணியளவில் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 2862 மில்லியன் கன அடி. தற்போது நீர்மட்டம் 21.3 அடியாக உள்ளது. ஏரிக்கு மணிக்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உபரிநீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன்பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.