ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த பலத்த மழைக்கு 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன. ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் கடலில் பலத்த காற்றும் வீசி வருகிறது. அது போல் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் படகு நிறுத்தும் ஜெட்டி பாலத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பக்கப்பலகைகள் உடைந்தன. இதில் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் விசைப்படகுகள் சேதமடைந்தன. ஒன்றுடன் ஒன்று மோதியதில் சிக்கிக்கொண்ட விசைப்படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காற்றில் சேதமடைந்த படகுகளை சீரமைக்க அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில்: புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் தணிகைவேல் (47). இவரது மனைவி ரமணி பொற்கலைக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 20ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கடல் அலையின் சீற்றம் அதிகமான நிலையில் படகு நடுக்கடலில் சேதமடைந்தது. இதையடுத்து விசைப்படகை கரைக்கு ஓட்டிய நிலையில், டூப்ளே சிலை ஒட்டியுள்ள கடற்கரை பகுதி அருகே தரைதட்டியது.
இதையடுத்து கடலில் குதித்து 3 மீனவர்களும் திரும்பினர். கனமழையாலும், கடல்சீற்றம் காரணத்தாலும் விசைப்படகை மீட்கும் முயற்சிகள் தொய்வடைந்தது. தற்போது வெயில் தலைக்காட்டிய நிலையில், மழையும் ஓய்ந்ததால் நேற்று 2 கிரேன்களின் உதவியுடன் விசைப்படகை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிரேனும் மணலில் சிக்கியது. விசைப்படகு முற்றிலும் சேதமடைந்து மண்ணில் புதைந்து இருக்கலாம் என தெரிகிறது.