சிம்லா: காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும். பாஜக வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சுந்தர்நகர், சலோனில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான அரசு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் இமாச்சல பிரதேச விவசாயிகளுக்கு ரூ.2,000 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 9 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. குடும்ப அரசியல், சுயநலத்தின் மறுஉருவமாக அந்த கட்சி திகழ்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸ் கட்சி ஊழலில் சாதனை படைத்து வருகிறது. பாதுகாப்பு துறையையும் அந்த கட்சி விட்டு வைக்கவில்லை. அங்கேயும் ஊழல்கள் நடைபெற்றன.
கடந்த 2014 முதல் 2017 வரை இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஏழைகளுக்கு 15 வீடுகள் மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன் பிறகு மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்றது. மாநிலம் முழுவதும் ஏழைகளுக்காக 10,000 வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் இதுவரை 8,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.
வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சி பாஜக. கடந்த பல ஆண்டுகளாக மத்தியில் நிலையற்ற ஆட்சி நீடித்தது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மத்தியில் நிலையான ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. வளர்ச்சித் திட்டங்கள் வேகம் பெற்றன. ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது.
வரும் 12-ம் தேதி தேர்தலின்போது மக்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வாக்கும் இமாச்சல பிரதேசத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும். அடுத்த 5 ஆண்டுகளை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டாம். அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
சலோன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி காரில் சென்றபோது வழிநெடுக ஏராளமான மக்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். அப்போது மாற்றுத்திறனாளி குழந்தைகளும் பிரதமரை வரவேற்று மலர்களை தூவினர். இதைப் பார்த்த பிரதமர் மோடி காரை விட்டு இறங்கி மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார். அவர்களோடு கலந்துரையாடினார்.