ஹிமாச்சல் பிரதேசத்தில் 68 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 35 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். இம்மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்கு பாஜக,
காங்கிரஸ்
என மாறி, மாறி ஆட்சி நடைபெற்று வருவதால், இம்முறை காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமருமா? இல்லை வரலாறு திருத்தி எழுதப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்குப்பதிவிற்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் சூழலில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. சிம்லாவில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதற்கு ”பாஜக சங்கல்ப் பாத்ரா 2022” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 11 விஷயங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
அதாவது, Uniform Civil Code எனப்படும் பொது சிவில் சட்டம், மாநில மக்கள் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் உயர்தர சாலை, முதல்வரின் அன்னா தட்டா திட்டத்தின் கீழ் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் நிதி, மாநில வருவாயை பெருக்கும் வகையில் ஆப்பிள் பேக்கேஜிற்கு 12 சதவீத வரி, புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள், மொபைல் கிளினிக் வேன்கள், ராணுவத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அதிகரிப்பு உள்ளிட்ட விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அதிகரிப்பு, ஏழை பெண்களுக்கு 3 இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள், ஏழை குடும்பங்களுக்கு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் பலன்கள், 5 ஆயிரம் மாணவிகள் மற்றும் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெறுவர்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்டவை பாஜக சார்பில் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள், பெண் தொழில் முனைவோர்களுக்கு வட்டி இல்லா கடன் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, ஹிமாச்சல் பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மேம்படுத்தும் வகையில் ’சக்தி’ என்ற பெயரில் 12 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
பொது சுகாதாரம் மற்றும் ஆரம்ப சுகாதாரத்தை மனதில் வைத்து மொபைல் கிளினிக் வசதிகள் ஒவ்வொரு தொகுதியிலும் இரட்டிப்பாக்கம் செய்யப்படவுள்ளன. வஃக்பு வாரிய சொத்துகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உரிய ஆணையம் மூலம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.