சிட்னி : இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டு சிட்னி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்திய நேரப்படி ஞாயிறு அதிகாலையில் நடந்துள்ளது.
நவம்பர் 2ஆம் தேதியன்று பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தான் தனுஷ்கா கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தனுஷ்காவை தவிர்த்து இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டுவிட்டது. இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததால் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் அந்த அணி ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டுள்ளது.
கைதான தனுஷ்கா குணதிலக, நடப்புத் தொடரில் நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றபோது காயம் காரணமாக தனுஷ்கா ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அவரது கைது பற்றி, இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதில் பெயர் குறிப்பிடாமல் இலங்கையைச் சேர்ந்தவர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. மேலும், “சிட்னியில் கடந்த வாரம் 29 வயது இளம் பெண் ஒருவர் ரோஸ் பே என்ற இடத்தில் அவரது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 31 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதான நபரும் புகார் கொடுத்த பெண்ணும் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி மாலையில் இந்த வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளதாக புகார் பதிவாகியுள்ளது. குற்றம் நடந்த இடத்தில் சிறப்புப் போலீஸார் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் இளம் வீரர் கைது சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.