பருவமழை எதிரொலி | சென்னையில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: பொது மக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க வீடு வீடாக குளோரின் மாத்திரைகள் வழங்கிடும் பணிகள் மற்றும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள செய்தி: சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். பொது மக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க வீடு வீடாக குளோரின் மாத்திரைகள் வழங்கிடும் பணிகள் மற்றும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினந்தோறும் 1000 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பருவ மழையினால் மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகக் கூடிய குளோரின் மாத்திரைகள் சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பொது மக்களுக்கு மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் செயற்பொறியாளரின் தலைமையில் பொறியாளர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்களைக் கொண்டு ஆய்வகத்தில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் குழு மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி முழுவதும் குடிநீரின் மாதிரிகளை சேகரிக்கும் பணிகளை 10 வெளி குத்தகைப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தினந்தோறும் 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது பருவமழையின் காரணமாக தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 04.11.2022 வரை 13780 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பருவ மழை காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும்.

மேலும், உரிய இடைவேளையில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம். மேலும் குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்கள், ட்ரம்கள், மேல்நிலை/ கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். எனவே, பருவ மழையினால் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென வாரியம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.