விமானத்தில் பறந்த கழுகு! ஓகி புயலில் ஒடுங்கிய சினேரியஸ்… ராஜஸ்தானில் சிறகை விரித்தது!

2017-ம் ஆண்டு ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டங்களில் உயிரிழப்புக்களும், நாச நஷ்டங்களும் ஏற்பட்டன. ஓகி புயலின் போது காற்றின் வேகத்தால் பாதை மாறி வந்த “சினேரியஸ் கழுகு” ஆசாரிப்பள்ளம் பகுதியில் காயம் அடைந்த நிலையில் கிடந்தது. அதை வனத்துறையினர் மீட்டு தக்கலை அருகே உள்ள உதயகிரி கோட்டையில் பராமரித்து வந்தனர். அரிய வகையை சார்ந்த “சினேரியஸ் கழுகு” பிணம் தின்னி கழுகு என அழைக்கப்படுகிறது.

கழுகு கூண்டுடன் வனத்துறை அதிகாரிகள்

மத்திய ஆசிய பகுதியை தாயகமாக கொண்ட இந்த கழுகு இந்தியாவில் அரிய வகை கழுகாக வரிசை படுத்தப்பட்டுள்ளது. சுமார் மூன்றரை அடி உயரத்துடன், 4 கிலோ எடையுடன், பெரிய கண்கள், கூரான வளைந்த அலகு, சிறகை விரித்தால் சுமார் 6-அடி அகலத்தில் கணப்படும் இந்த கழுகுகள் விண்ணில் அதிக உயர்த்தில் பறக்கக்கூடியவை. விலங்குகளையும், மீன்களையும் வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் இந்த வகை கழுகுகள் இந்தியாவில் இமயமலை மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகமாக காணப்படுகின்றன.

ஓகி புயலில் சிக்கி காயம் அடைந்த அந்த கழுகுக்கு ஓகி எனவே பெயரும் வைத்து பராமரிக்கப்பட்டது. உதயகிரி கோட்டையில் தினமும் சுமார் ஒன்றரை கிலோ மாமிசம் கொடுத்து பராமரிக்கப்பட்டு வந்தது.

அதிக உயரத்திலும், நீண்ட தூரத்திலும் பறந்துசென்று விண்ணில் கோலோச்சும் இந்த கழுகை கடந்த ஐந்து ஆண்டுகளாக தனிமையில் சிறு இடத்தில் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். எனவே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வனப்பகுதியில் அந்த இன கழுகு கூட்டத்துடன் விட வேண்டும் என்ற எண்ணத்தில் வனத்துறையினர் கடந்த 5-மாதங்களாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி வண்டலூருக்கு கொண்டுசெல்லப்பட்ட கழுகு, கடந்த 3-ம் தேதி விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது கழுகு ஜோத்பூரை அடைந்துவிட்டது.

அரியவகை சினேரியஸ் கழுகு

ஜோத்பூரில் உள்ள மச்சியா உயிரியல் பூங்காவில் கழுகுகளை பராமரிக்கும் வசதி உள்ளது. அந்த உயிரியல் பூங்காவின் அருகே ‘கிரு’ என்ற பகுதியில் இறந்த கால்நடைகள் கொட்டி வைக்கப்படுகிறது. அங்கு பல இன கழுகுகள் உள்ளன. அதில் தனது இன கழுகு கூட்டத்துடன் சினேரியஸ் கழுகு சேர்ந்துவிடும் என்கின்றனர் வனத்துறையினர். ஜோத்பூர் வரை கழுகை கொண்டு விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள்.

விமானத்தில் ஏற்றப்படும் கழுகு

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், “கன்னியாகுமரியில் இருந்து ஜோத்பூர் செல்ல 2600 கிலோ மீட்டர். கழுகை சாலை மார்க்கமாகவோ ரயில் மூலமாகவோ ராஜஸ்தான் எடுத்து செல்ல பல நாட்கள் ஆகும். அதனால் மனச்சோர்வு ஏற்பட்டு கழுகு உயிரிழக்க வாய்ப்பு உண்டு.

எனவே மருத்துவ குழுவினரிடம் ஆலோசித்து சென்னையில் இருந்து விமானம் மூலம் கழுகை எடுத்து செல்ல முடிவெடுத்தோம். ஆரம்பத்தில் காற்றோட்டமான கூண்டு ஏற்படுத்தபட்டு, கழுகு பயப்படாமல் இருக்க இங்குள்ள மண், செடிகளை கூண்டில் வைத்தோம். கூண்டில் அடைத்தும், காரில் எடுத்துச் சென்று பலநாட்கள் பயிற்சி கொடுத்தோம். பின்னர் உதயகிரி கோட்டையில் இருந்து ஏசி கார் மூலம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜஸ்தான் சென்றடைந்த கழுகு

விமானங்களில் பூனை, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை மட்டுமே எடுத்து செல்ல முடியும் என்பதால் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கழுகை எடுத்துச்சென்றோம். இரவு நேரத்தில் கழுகு ஓய்வு எடுக்கும் என்பதால் பயணத்தை இரவு நேரத்தில் ஏற்படுத்தினோம். விமானத்திலும் நல்ல காற்றோட்டமான பகுதியில் கழுகின் கூண்டை வைக்க சிறப்பு அனுமதி பெற்றோம். இப்போது ஜோத்பூர் உயிரியல் பூங்காவில் உள்ள கழுகு தானக உணவை தேடி சாப்பிட சிலகாலம் ஆகும். வேட்டைக்கு முழு தகுதி அடைந்த பின்னர் கழுகு வனத்தில் விடப்படும். விமானத்தில் கழுகை அழைத்துச் செல்வது இதுவே முதல்முறை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.