நவம்பர் 4 வெளியீட்டில் முன்னணியில் 'லவ் டுடே'
2022ம் ஆண்டின் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டோம். பொதுவாக ஒரு ஆண்டின் கடைசி மாதங்களில் தீபாவளி தினத்துடன் முக்கிய படங்களின் வெளியீடு முடிந்துவிடும். அதற்குப் பிறகு மீடியம் பட்ஜெட் படங்கள், இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்கள்தான் பொங்கல் வரையில் தியேட்டர்களில் வெளியாகும். படத்தை முடித்து வெளியிடாமல் தவிப்பவர்களும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் எப்படியாவது படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என முயற்சிப்பார்கள்.
இந்த நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் ''4554, காபி வித் காதல், கண்டேன் உன்னை தந்தேன் என்னை, லவ் டுடே, நித்தம் ஒரு வானம், ஒன் வே,” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'லவ் டுடே, நித்தம் ஒரு வானம்' ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ளன. இருப்பினும் 'நித்தம் ஒரு வானம்' படத்திற்கு ரசிகர்களின் வருகை குறைவாகவே உள்ளது. அதே சமயம் 'லவ் டுடே' படம் இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு குடும்பத்துடன் ரசிகர்கள் வர வாய்ப்பில்லை என்றாலும் அந்தக் குறையை இளைஞர்கள் போக்கிவிட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, 'லவ் டுடே' படம் 'டேபிள் பிராபிட்' பார்த்துவிட்டது என்பதுதான் கோலிவுட் தகவல். தியேட்டர் வசூல் அவர்களுக்குக் கூடுதல் லாபம்தான். பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோருக்குப் பிறகு இயக்கம், நடிப்பு என இரண்டிலும் வெற்றி பெற்றவர்கள் மிக மிகக் குறைவு. அந்த வரிசையில் 14 வருடங்களுக்கு முன்பு 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் சசிகுமார் இடம் பிடித்தார். ஆனால், அவரும் அதற்குப் பிறகு இயக்கத்தையும், நடிப்பையும் சேர்ந்து செய்யவில்லை. அவருக்கு அடுத்து தற்போது இந்த 'லவ் டுடே' படம் மூலம் பிரதீப் ரங்கநாதன் இடம் பிடித்திருக்கிறார். இவர் தொடர்ந்து இயக்கத்தையும், நடிப்பையும் சேர்ந்து செய்வாரா என்பது விரைவில் தெரிய வரும்.