“தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சி மட்டுமே நிலைத்திருக்கும். எதிர்கால சந்ததிகளுக்கு திமுகவின் தியாக வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்” என திமுக தொண்டர்களுக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் குன்னூர் கலைஞர் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “உலகத்திலேயே 50 ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்த வரலாறு எவருக்கும் கிடையாது. ஆனால் ,ஒரு கட்சியில் 50 ஆண்டு காலம் தலைவராக இருந்தவர் மறைந்த தலைவர் கலைஞர் மட்டும் தான். அப்படிபட்ட மகத்தான ஜாம்பவானாக திகழ்ந்த கலைஞர், மிசாவில் இருந்து கட்சியை காப்பாற்றியதுடன், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.
<iframe width=”853″ height=”480″ src=”https://www.youtube.com/embed/aCA4y-keDog” title=”அடுத்த தேர்தலுக்குப் பிறகு திமுக மட்டுமே இருக்கும் : துரைமுருகன்” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>
இன்னொரு முறை தமிழ்நாட்டில் திமுக போன்ற ஒரு கட்சி உருவாக முடியாது. வரும் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு ஆளுமையில் திமுக மட்டுமே இருக்கும். மற்ற கட்சிகள் தமிழ்நாட்டில் பெயரளவில் மட்டுமே செயல்படும். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க திமுகவை பாதுகாக்க வேண்டும் என்றால் இக்கட்சியின் கொள்கைகளை அழியாமல் பாதுகாத்திட வேண்டும். ஆகையால் இளைய சமுதாயம் மத்தியில் திமுகவின் தியாக வரலாற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஒன்றியத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் இந்தியை திணிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், குறிப்பாக பாஜக அரசு இந்தியை திணிப்பதில் காட்டெருமை போன்று யாரையும் எதையும் பொருட்படுத்தாமல் அதன் போக்கில் செல்வது போல் சென்று கொண்டிருக்கிறது. இவர்களை வளரவிட்டால் நமக்கு பேராபத்து காத்திருக்கும்” எனக்கூறி குற்றம் சாட்டினார். இந்நிகழ்ச்சியில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM