ரஜினி படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக பா.ம.க இளைஞரணித் தலைவர்; ரஜினி vs பா.ம.க – அன்று நடந்தது என்ன?

‘ஜெயிலர்’ படத்துக்குப் பிறகு லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கக் கமிட் ஆகியிருக்கிறார் ரஜினிகாந்த். அதில் ஒன்று அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் ‘லால் சலாம்’. இதில் ரஜினிகாந்த கெஸ்ட் ரோலில் மட்டுமே நடிக்கிறார். இந்தப் படத்துக்கான தொடக்கவிழாதான் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.

கோடம்பாக்கத்தில் இப்போது இந்தச் செய்திதான் ஹாட் டாபிக். லைகா தயாரிப்பில் ரஜினி இதற்கு முன்புகூட ‘தர்பார்’ படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது இந்த இரு படங்கள் குறித்த அறிவிப்பு, ரஜினி மற்றும் தயாரிப்புத் தரப்பால் உறுதி செய்யப்பட்டு, அது தொடர்பான செய்தியும் புகைப்படங்களும் பத்திரிகைகளில் வெளியான போதுதான் சினிமா வட்டாரத்தினர் மட்டுமல்லாது ரஜினியின் ரசிகர்களாலும் அந்தப் பழைய பிளாஷ்பேக்கை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

லைகா தயாரிப்பில் ரஜினி

நேரடியாக விஷயத்துக்குள் சென்றுவிடலாம். ரஜினி நடிக்க இருக்கும் இந்த இரு படங்களை உறுதி செய்த நிகழ்வில் லைகா தயாரிப்பு நிர்வாகியாகக் கலந்துகொண்டது ஜி.கே.எம்.தமிழ்க்குமரன். இவர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன். பாட்டாளி மக்கள் கட்சியின் இப்போதைய இளைஞரணித் தலைவர்.

இப்போது புரிந்திருக்குமில்லையா? பா.ம.க – ரஜினி இடையேயான அந்த மோதல் கதைக்குள் செல்லலாமா?

சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கைதுசெய்ய வேண்டும் எனப் பேசியதுதான் பிரச்னையின் தொடக்கப் புள்ளி. ரஜினியின் இந்தப் பேச்சு பா.ம.க. தலைவர் ராமதாஸைக் கொதிப்படையச் செய்ய, அவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி ரஜினியை விமர்சித்ததுடன், “உண்மையான வன்னியர்கள் இனி ரஜினி நடிக்கும் படங்களைப் பார்க்கக் கூடாது” எனவும் பொதுக்கூட்ட மேடையிலேயே பேசினார்.

ராமதாஸின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களைச் சூடாக்க, அவர்கள் ராமதாஸின் உருவ பொம்மையை ஆங்காங்கே எரிக்க, பிரச்னை பா.ம.க தொண்டர்கள் வெர்சஸ் ரஜினி ரசிகர்கள் என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது.

இந்த நிலையில்தான் 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினி நடித்த பாபா படம் ரிலீஸுக்குத் தயாரானது. ‘வட மாவட்டங்களில் படம் எப்படி ஓடுகிறது எனப் பார்த்துவிடுகிறோம்’ எனச் சூளுரைத்தார்கள் பா.ம.க-வின் தொண்டர்கள். ரஜினி தரப்பில் படம் பாதுகாப்பாக வெளியாக காவல் துறையை அணுகினார்கள்.

‘பாபா’ படத்தில் ரஜினி

ஆனாலும் படம் வெளியான நாளில் பா.ம.க வலுவாக இருக்கும் வட தமிழ்நாட்டின் பல ஊர்களில் படம் திரையிடப்படவில்லை. தியேட்டர் அதிபர்கள் பலர் ‘எதற்கு வம்பு’ என அச்சப்பட்டதுதான் காரணம். மீறித் திரையிடப்பட்ட சில தியேட்டர்களில் திரை கிழிப்பு, படப்பெட்டி கடத்தல் என அசம்பாவித நிகழ்வுகளும் நடந்தன.

அந்த நேரத்தில் ‘பாபா‘ படத்தை படு மோசமாக விமர்சனம் செய்து ஓர் அறிக்கை வெளியிட்டார், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி. “நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் படத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை. படம் மோசமாக இருப்பதால்தான் தோல்வியடைந்தது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார் ஜி.கே.மணி.

நடந்த இந்தச் சம்பவங்கள் அதுவரை அமைதி காத்த ரஜினியை ராமதாஸுக்கு எதிராக அறிக்கையே விட வைத்தது. ‘வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார்’ என ராமதாஸ் குறித்து காட்டமாக அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

பா.ம.க – ரஜினி இடையேயான இந்தப் பகை அப்படியே தொடர்ந்து 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க அணியில் இணைந்து போட்டியிட்டது பா.ம.க. அப்போது ‘பா.ம.க போட்டியிட்ட 6 தொகுதிகளில் மட்டும் தன் ரசிகர்கள் பா.ம.க-வுக்கு எதிராக வாக்களிப்பார்கள்’ எனத் தெரிவித்தார் ரஜினி. ஆனாலும் தேர்தலில் தான் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் வென்றது பா.ம.க.

அதன் பிறகு ரஜினி குறித்து ராமதாஸ் பெரிதாக எதுவும் கருத்துச் சொல்வதில்லை. ரஜினி அரசியல் கட்சி தொடங்கப்போவதாகச் செய்தி வெளியானபோதுகூட நையாண்டியாக சில வார்த்தைகளில் அதைக் கடந்துவிட்டார். அன்புமணி ராமதாஸ் மட்டும் அவ்வப்போது ரஜினி சிகரெட் பிடிக்கிற காட்சிகளில் நடிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுப்பார்.

ராமதாஸ் – அன்புமணி

ரஜினி அரசியலுக்கு வருவதைக் கண்டு பயந்தே பா.ம.க-வினர் அவரை எதிர்க்கிறார்கள் எனச் சொல்லி வந்தனர் ரஜினி ரசிகர்கள். தீவிரமான பா.ம.க. தொண்டர்களுக்குமே கூட ரஜினி மீது சின்ன அதிருப்தி இப்போது வரை உண்டு என்கிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான், பா.ம.க-வில் முக்கியமான பதவி கிடைத்த அடுத்த சில தினங்களில் ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்.

ரஜினியை பா.ம.க இளைஞரணித் தலைவராகச் சந்திக்கவில்லை தமிழ்க்குமரன். ஆனாலும் ரஜினி ரசிகர்கள் மற்றும் பா.ம.க தொண்டர்களின் மனநிலை இப்போது என்னவாக இருக்கும்? கமென்ட்டில் சொல்லுங்களேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.