இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்.பி., ஆசம் ஸ்வாதி, 75, தன் மனைவியுடன் படுக்கை அறையில் இருந்த அந்தரங்க, ‘வீடியோ’வை யாரோ தன் மனைவியின், ‘மொபைல் போனுக்கு’ அனுப்பி வைத்துள்ளதாக கூறி, செய்தியாளர்கள் முன் கதறி அழுதார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் விசுவாசி என அழைக்கப்படுபவர் ஆசம் ஸ்வாதி. இவர், அக்கட்சி எம்.பி.,யாகவும் உள்ளார். ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வாவை சமூகவலைதளத்தில் விமர்சித்ததற்காக, ஆசம் ஸ்வாதி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவரது ஆடைகள் களையப்பட்டு, கேலிக்கும் சித்ரவதைக்கும் ஆளானதாக ஜாமினில் வெளிவந்த பின் ஆசம் ஸ்வாதி தெரிவித்தார். இந்நிலையில், நேற்று காலை செய்தியாளர்கள் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்தார். அப்போது ஆசம் ஸ்வாதி கூறியதாவது:
நேற்றிரவு என் மனைவியின் மொபைல் போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து ஒரு வீடியோ வந்தது. அதில், நானும், என் மனைவியும், படுக்கை அறையில் நெருக்கமாக இருந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். நானும் என் மனைவியும் குவெட்டா சென்ற போது இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. என் பேச்சை நாட்டில் உள்ள பெண்களும் கேட்டுக் கொண்டு இருப்பர் என்பதால் இதற்கு மேல் இந்த அசிங்கத்தை என்னால் விவரிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசிக் கொண்டிக்கும் போதே, ஆசம் ஸ்வாதி கதறி அழுதார். ”இந்த வீடியோ, ‘போட்டோஷாப்’ மென்பொருள் வாயிலாக போலியாக உருவாக்கப்பட்டுள்ளது,” என, எப்.ஐ.ஏ., எனப்படும் பாகிஸ்தானின் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முறையாக புகார் அளிக்கும்படியும், ஆசம் ஸ்வாதியிடம் எப்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். பாக்., சார்பில், ஆசம் ஸ்வாதி மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement