3-அடுக்கு மாடி வீடு; ஆண்டுக்கு ரூ.70 லட்சம் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கலக்கும் மாடித்தோட்ட விவசாயி!

பலரும் விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால், செய்யும் வேலைகளை விட்டு, விவசாயம் செய்யத் தொடங்குவதுண்டு. ஆனால் ஒருவர் தன்னுடைய வீட்டையே தோட்டமாக மாற்றியுள்ளார் எனச் சொன்னால் நம்புவீர்களா?

ராம்வீர் சிங்

உத்திரப் பிரதேச மாநிலம், பரேலில் வசித்து வரும் ராம்வீர் சிங் என்பவர் முழுநேர பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். 2009 -ஆம் ஆண்டில் அவருடைய நண்பரின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ரசாயனம் கலந்த காய்கறிகளை உண்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்பதைக் கேட்டு அதிர்ந்து போனார்.

இத்தகைய சூழலிலிருந்து, தன்னுடைய குடும்பத்தைக் காக்கத் தானே இயற்கை விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தார். முதற்கட்டமாக தன்னுடைய வேலையை விட்டவர், பரேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய பூர்விக நிலத்தில் விவசாயம் செய்யத் தீர்மானித்தார்.

விவசாய முயற்சிகளில் இருந்தபோதே 2018 -ஆம் ஆண்டு துபாயில் விவசாயம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொள்ளும் வாய்ப்பு ராம்வீருக்கு கிடைத்தது. அப்போது, ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறை குறித்து அறிந்து கொண்டார் ராம்வீர் சிங். 

அதாவது ஹைட்ரோபோனிக்ஸ் என்பது ஒருவகை மண்ணில்லா விவசாய முறை. தண்ணீர் மற்றும திரவ உரங்களைக் கொண்டே விவசாயம் செய்துவிட முடியும். ஒருமுறை அமைத்துவிட்டால் தொடர்ந்து அதிலிருந்து காய்கறிகளை பறிக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்கிறார். இதில் காய்கறி செடிகள், கீரைகள், மூலிகைத் தாவரங்கள் அனைத்தும் மண் இல்லாமல், நீர் சார்ந்த கனிம ஊட்டச்சத்து கரைசல் மட்டும் பயன்படுத்தும் முறை.

இந்த விவசாய முறை மூலம் ஈர்க்கப்பட்டவர், தன்னுடைய மூன்று அடுக்கு வீட்டையே தோட்டமாக மாற்ற முடிவு செய்தார். குறைந்த எண்ணிக்கையில் செடிகளை வைத்து தொடங்கியவர், செடிகளை வளர்க்கும் நுட்பத்தைக் கற்றுக் கொண்டு இப்போது `விம்பா ஆர்கானிக் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ்’ என்ற பெயர் பெயரில் சுமார் 10,000 செடிகள் வரை வீட்டில் வளர்த்து வருகிறார். ஆனால், இதை அமைக்க ஆரம்பக்கட்ட முதலீடு அதிகம் என்றும் சொல்கிறார். பண வசதி இருப்பவர்கள் செலவு செய்து ஒருமுறை அமைத்துவிட்டால் பல ஆண்டுகளுக்கு பலன் தரும்.

ராம்வீர் சிங்

இத்தாவரங்களுக்கு பயோ திரவ உரங்களை தண்ணீரில் கலந்து பி.வி.சி குழாய்களை வழியே கொடுத்து வருகிறார். “இக்குழாய்கள் வீட்டில் கீழ்நோக்கியும், மேல் நோக்கியும் ஈர்ப்பு விசை மூலம் தாவரங்களுக்குத் தண்ணீரைச் சுழற்சியில் வழங்கி வருகிறது. பராமரிப்பு முறை மிகவும் கவனமாக செய்ய வேண்டியது அவசியம். குழாயில் உடைப்பு ஏற்பட்டாலோ, சேதம் ஏற்பட்டாலோ தண்ணீர் வீட்டுக்குள் சென்றுவிடும். அதனால் கவனமாக செய்ய வேண்டும்” என்கிறார்.  

“இந்த முறையில் அதிக மண் தேவைப்படுவதில்லை. பூச்சி தொல்லையும் பெரிதாக இல்லை. அதோடு செடியை வளர்க்கத் தேவையான 80 சதவிகித நீரும் மிச்சமாகிறது. வருடத்திற்கு சுமார் 70 லட்சம் வரை இந்த வீட்டுத்தோட்டத்தின் மூலம் சம்பாதித்து வருகிறேன். காய்கறிகளை எடுத்துக் கொண்டு சந்தைக்கு போக வேண்டிய அவசியமில்லை. என் வீட்டைச் சுற்றியே விற்று விடுகிறேன்” என்று ராம்வீர் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.