புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியை தோற்கடித்ததால் முன்னாள் அமைச்சர் தூண்டுதலினால் தனது தொகுதியை புறக்கணிப்பதாக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ பேரவையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் கடந்த 25 ஆண்டுகளாக மல்லாடி கிருஷ்ணாராவ் வென்று வந்தார். அவர் கடந்த ஆட்சியில் காங்கிரஸில் இருந்து விலகி என்ஆர் காங்கிரஸில் இணைந்தார். ஏனாமில் கடந்த தேர்தலில் மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டியிடாமல் ரங்கசாமி போட்டியிட்டார். ஆனால், கோலப்பள்ளி சீனிவாச அசோக் சுயேட்சையாக போட்டியிட்டு முதல்வர் ரங்கசாமியை தோற்கடித்து வென்றார்.
அதையடுத்து பாஜகவை ஆதரிக்கத்தொடங்கினார். முதல்வர் ரங்கசாமியை தோற்கடித்த அவர், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலகம் தரவில்லை” என்று பேரவையில் புகார் தெரிவித்திருந்தார். அத்துடன் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார். குறிப்பாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் தூண்டதலினால்தான் பணிகள் நடக்கவில்லை. பட்டா தரவில்லை. தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர், அமைச்சர்களிடம் மனுவும் ஏனாம் எம்எல்ஏ கோலப்பள்ளி சீனிவாச அசோக் தந்திருந்தார். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சட்டப்பேரவைக்கு வந்த ஏனாம் எம்எல்ஏ கோலப்பள்ளி சீனிவாச அசோக் உண்ணாவிரதத்தில் இன்று ஈடுபட தொடங்கினார். அப்போது சட்டப்பேரவை காவலர்கள் எம்எல்ஏ ஆதரவாளர்களை மட்டும் வெளியேற்றினர்.
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எம்எல்ஏ கூறுகையில், “18 மாதங்களாகியும் தொகுதியில் வளர்ச்சி பணிகள் இல்லை. நலத்திட்ட உதவிகள் செய்யமுடியவில்லை. முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து வென்றதால் அவர் புறம் தள்ளுகிறார். முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் பின்புலமாக இருக்கிறார். ” என்று குறிப்பிட்டார்.
அதற்கு பேரவைத் தலைவர், “பேரவையில் போராட்டம் நடத்தக்கூடாது. கோரிக்கைகள் இருந்தால் அலுவலகத்தில் சொல்லுங்கள். போராட்டம் நடந்தால் அப்புறப்படுத்த சொல்வேன்” என்று குறிப்பிட்டார். ஆனால் எம்எல்ஏ மறுத்து விட்டு, போராட்டம் தொடர்வேன். என்னை அப்புறப்படுத்தினால் சாலையில் மறியலில் ஈடுபடுவேன்” என்றார். இதையடுத்து பேரவைத்தலைவர் அங்கிருந்து சென்றார்.
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் இரு வாயில் கதவுகளும் மூடப்பட்டன. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ கூறுகையில், “தொகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் தூண்டுதலினால் முதல்வர் ரங்கசாமி எங்கள் தொகுதியை புறம் தள்ளுகிறார். மக்கள் நலத்திட்டம் தர உறுதி தந்தால் போராட்டத்தை கைவிடுவேன்” என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.