கடலூர் மாவட்டம், நெய்வேலி காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராக (எஸ்.ஐ) பணியாற்றி வருகிறார் பெண் போலீஸ் ஒருவர். இவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஆலடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அங்கு ஆய்வாளராக இருந்த விஜயகுமார் என்பவர், அந்தப் பெண் போலீஸை அடிக்கடி திட்டுவதும், தவறான இரட்டை அர்த்தங்களில் பேசுவதுமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து பெண் போலீஸ், (எஸ்.சி/எஸ்.டி) ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகாரை ஏற்ற ஆணையம், அதை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த நிலையில், 12 வாரங்களுக்குள் இந்தப் புகார்மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, கடலூர் டி.ஐ.ஐி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இந்தப் புகார் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பெண் போலீஸூம், ஆய்வாளர் விஜயகுமாரும் நேரில் ஆஜராகி, தங்கள் பதிலை அளித்திருக்கின்றனர்.