கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வழிப் பாதையை ஆக்கிரமிப்பு செய்வதாக பள்ளி மாணவர்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது காந்தி நகர். ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காந்தி நகர் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாதை வழியாக கீரிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். நாள்தோறும் இந்த வழியாகத்தான் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே இந்த சாலையை பயன்படுத்தி கீரப்பட்டி பகுதியின் அருகே தனியார் வீட்டுமனைகள் கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டுமனைகளுக்கு இந்த சாலை வழியாக வாகனங்களில் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். `பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலையை தங்களது வீட்டு மனைக்கு மக்கள் பயன்படுத்தக் கூடாது. பொதுப்பணித்துறை சாலையை தனியார் வீட்டுமனைகள் ஆக்கிரமித்துக் கொள்கிறது’ என குற்றம் சாட்டினர்.
இதனை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுடன் பொதுமக்கள் கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை இயக்கும் முயற்சியில் ஈடுபடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் சாலைகள் ஆக்கிரமிப்பு செய்தால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வர சிரமம் ஏற்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM