தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த யோகிபாபு தனது அசாத்தியமான நடிப்பால் முன்னணிக்கு வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறக்க, சந்தானம் ஹீரோவாக மாற, சூரி, சதீஷின் காமெடி பலருக்கு போர் அடிக்க நகைச்சுவைக்கான வெற்றிடத்தை யோகிபாபு நிரப்பினார். தற்போது அவர் பல படங்களில் நடித்துவருகிறார். வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடிக்கிறார் யோகிபாபு. தொடர்ந்து காமெடியில் மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த மண்டேலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி தேசிய விருதையும் பெற்றது. இதனால் தொடர்ந்து யோகிபாபு ஹீரோவாகவே நடிப்பார் என தகவல் பரவியது. ஆனால் தனக்கு ஹீரோவாக நடிப்பதைவிட காமெடியனாக நடிப்பதிலேயே ஆர்வம் அதிகம் என அவர் கூறிவருகிறார். இதற்கிடையே தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார் யோகிபாபு. ஏற்கனவே ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்திருந்த யோகி தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த யோகிபாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஷாருக்கானுடன் இணைந்து இரண்டாவது படம் நடிக்கிறேன். இது சிறப்பான அனுபவமாக இருக்கிறது. இதற்காக இயக்குநர் அட்லிக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக நான் செய்த சின்னச்சின்ன சம்பவங்களை வைத்து ஒரு படம் நடிக்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்குத் தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை. ‘லவ் டுடே’, ‘காபி வித் காதல்’ படமும் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது.
சில நேரங்களில் சோலோ பர்ஃபாமென்ஸ்தான் ஹிட்டாக அமையும். எப்போதும் ஹீரோவாக நடிக்க முடியாது. அதற்குத் தகுந்த முகபாவனை எனக்கு கிடையாது. மண்டேலா படத்தைப் பெரிய ஹீரோவை வைத்து எடுக்க முடியுமா? முகத்திற்குத் தகுந்த மாதிரி கேரக்டரில்தான் என்னால் நடிக்க முடியும். அந்த மாதிரி கேரக்டர்தான் எனக்கு ஷாருக்கான் படத்திலும் கிடைத்திருக்கிறது. எனக்கு கை கொடுத்தது காமெடிதான். அதைத் தாண்டி என்னால் வெளியே போகமுடியாது” என்றார்.