24 மணி நேரத்திற்குள் முதல் வேட்டை: ம.பி. வனத்தில் புள்ளிமானை புசித்த சிவிங்கிப் புலிகள்

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் குனோ தேசிய பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 சிவிங்கி புலிகள் (சீட்டா) வனப்பகுதியில் திறந்துவிடப்பட்ட நிலையில், அவை முதல் வேட்டையை நடத்தியுள்ளன. பூங்காவில் விடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவை புள்ளிமான் ஒன்றை வேட்டையாடி புசித்துள்ளன. ஞாயிறு இரவு அல்லது திங்கள் அதிகாலை நேரத்தில் இந்த வேட்டை நடந்திருக்க வேண்டுமென்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தையில் பல வகைகள் உள்ளன. இதில் சீட்டா வகைகள் சிவிங்கி புலிகள் என்று அழைக்கப்படுகின்றன. கடந்த 1950-க்குப் பிறகு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இவை தென்படவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியின் முயற்சியால் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் (5 பெண்) மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த 8 சிவிங்கி புலிகளையும் பிரதமர் மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி குனோ தேசிய பூங்காவில் ஒப்படைத்தார். எனினும், பூங்கா நிர்வாகத்தினர் அந்த சிவிங்கி புலிகளை சிறிய பகுதியில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். வேறு கண்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதால், உடல்நிலையை கண்காணிக்கவும் இங்குள்ள உணவு, சுற்றுச்சூழலுக்கு பழக வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தனிமைப்படுத்தல் காலம் முடிந்த நிலையில், 8 சிவிங்கி புலிகளுக்கும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவை ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்ததால், மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகத்திடம் இருந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் தடையில்லா சான்று பெற்றது. இதனையடுத்து, ஃப்ரெட்டி, எல்டன் என்ற 2 ஆண் சிவிங்கி புலிகள் குனோ தேசிய பூங்காவின் பரந்த வனப்பகுதியில் நேற்று திறந்து விடப்பட்டன. இந்நிலையில், அவை சூழலுக்கு தங்களை தகவமைத்துக் கொண்டு வேட்டையாடியுள்ளன.

முன்னதாக நேற்று சிவிங்கிப் புலி பரந்த வனப்பரப்பில் திறந்துவிடப்பட்டது குறித்து வீடியோவுடன் ட்வீட் செய்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, அவற்றின் ஆரோக்கியம் மகிழ்ச்சியளிப்பதாகப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.