லோன் ஆப்-களுக்கு தனி விதிமுறைகள் வகுக்கப்படுமா? – மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ஆன்லைன் கடன் செயலிகளுக்கு தனி விதிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் தற்போது ஸ்மார்ட்போன் வழியாக சுலபமாக கடன் பெற முடிகிறது. இதற்காக பல நிறுவனங்கள் கடன் செயலிகளை உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட் போன் செயலிகள் வழியாக சுலபமாக கடன் கிடைப்பதை நம்பி பலர் தங்கள் பணம் மற்றும் சொத்துகளை இழந்து வருகின்றனர்.

ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்கள் போலி செயலிகளை உருவாக்கி பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களை குறிவைத்து மோசடி செய்து வருகின்றன. பூஜ்ய சதவீத வட்டி என அறிவித்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.

செல்போனில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களையும் திருடிக் கொள்கின்றனர். அந்தப் புகைப்படங்களை வைத்து கடன் பெற்றவர்களை மிரட்டி வருகின்றனர். கடன் தொகையை விட பல மடங்கு அதிக தொகை வசூலிக்கின்றனர். இந்த மோசடியை தடுக்க ஆன்லைன் கடன் செயலிகளுக்கு தனி பதிவு எண் வழங்கி விதிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய தொழில்நுட்பத் துறை செயலாளர், மத்திய நிதித் துறை செயலாளர், ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.