60 ஆயிரம் ரேஷன் கார்டுகளை நீக்க அரசு அதிரடி முடிவு..!

இரண்டு இடங்களில் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளை அரசு கண்டறிந்துள்ளது. இதையடுத்து, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத 60 ஆயிரம் பேரை நீக்க குடிமைப் பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பொது விநியோகத் திட்டத்தை நடத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சேரும். தகுதியற்ற, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மாநில அரசு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் 3.50 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள சூழ்நிலையில், இரண்டு மாநிலங்களில் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியற்ற பயனாளிகளை அரசு கண்டறிந்துள்ளது.

இதில், புதுச்சேரியில் இருந்து 13,400 பேர் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தங்கள் பெயர்களை ரேஷன் கார்டுகளில் இடம்பெறச் செய்துள்ளது தெரியவந்தது. புதுச்சேரியில் அதிகபட்சமாக 11,135 பேர் சிக்கியுள்ளனர். காரைக்காலில் 214 பேர், ஏனாமில் 2041 பேர், மாகியில் 10 பேர் போலி பயனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியான ஆவணங்ளை சமர்பிக்காத இவர்களின் பெயர்களை நீக்குவது தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆய்வு செய்து வருகிறது. இதேபோல், ரேஷன் கார்டுடன் 60 ஆயிரம் பேர் இன்னும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். பலமுறை வாய்ப்பு கொடுத்தும் கூட அவர்கள் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.

புதுச்சேரி மாநிலத்தில் 14 லட்சம் பேருக்கு ஆதார் எண் எடுக்கப்பட்டுள்ளது. மாநில மக்கள் அனைவரும் ஆதார் எடுத்துள்ளனர். மாநிலத்தில் ஆதார் எடுக்கப்பட்டது 100 சதவீதமாக பதிவாகி உள்ளது. அப்படி இருந்தும், 60 ஆயிரம் பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் வசிக்காமல், பிற மாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இவர்களை பற்றிய முகவரியை எடுத்துள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை, வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்து வருகிறது. இவர்கள் அனைவரும் தாமாக முன் வந்து ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், அந்த ரேஷன் கார்டுகளில் இருந்து அவர்களின் பெயரை நீக்க குடிமைப் பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனி நபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும். ரேஷன் வரம்புக்கு மேல் வருமானம் இருப்பதால், ரேஷனுக்கு தகுதியற்ற நபர்களையும் அரசாங்கம் நிறுத்த முடியும். தகுதியான நபர்கள் மட்டுமே மானிய விலையில் அரிசி ஆகியவற்றை பெறுவதையும் உறுதி செய்ய முடியும் என்பதால், கள ஆய்வை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது.

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ஆதார் இணைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் தகுந்த ஆவணங்களுடன் இந்த அலுவலகத்தை நேரடியாக அணுகி, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.