கோழிக்கோடு: ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கேரளாவில் முஸ்லிம் இளம்பெண்கள் சிலர் திரண்டு ஹிஜாபை எரித்து முழக்கமிட்டனர். கோழிக்கோடு மாவட்டம் டவுன் ஹால் அருகே திரண்ட 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ”ஹிஜாப் மூலம் பெண்களை அடிமைப்படுத்த வேண்டாம். ஹிஜாபிலிருந்து விடுதலை வேண்டும்” என்று கோஷமிட்டனர். தொடர்ந்து ஒரு நீளமான குச்சியில் மாட்டிவைக்கப்பட்டிருந்த ஹிஜாபுக்கு ஒரு பெண் தீ வைக்க, சுற்றியிருந்தவர்கள் ஹிஜாப் எதிர்ப்புக் கோஷங்களை முழங்கினர். போராட்டத்தின் முடிவில் இஸ்லாமிக் ஃப்ரீ திங்கர்ஸ் கூட்டமைப்பின் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
ஈரான் போராட்டம் பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். நாட்டில் பெண்களின் ஆடையை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.
அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இந்தப் போராட்டத்தில் இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.