உங்களை முழுதாக படித்து முடிக்கவில்லை – கமலுக்கு பார்த்திபன் வாழ்த்து

இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒருவர் கமல் ஹாசன். நடை பழகிய வயதிலேயே சினிமாவில் தோன்றிய அவர் உதவி நடன அமைப்பாளராக, உதவி இயக்குநராக என பல வழிகளில் பயணித்தவர். ஆனால் அவரது திறமையை உணர்ந்துகொண்ட கே.பாலசந்தர் கமல் ஹாசனை நடிப்பு வழியில் செல்ல அறிவுறுத்தினார். அதன்படி சென்ற கமல் ஹாசனை விஞ்சுவதற்கு நடிப்பில் ஆளில்லை. கலைத்தாயின் பெரிய மகன் சிவாஜி கணேசன் என்றால் இளைய மகன் கமல் ஹாசன் என பலர் கூறுவதுண்டு.

நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கமல் தனி முத்திரையை பதித்தவர். எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக சிந்திப்பது மட்டுமின்றி அதை சரியாக ரசிகர்களுக்கு பரிமாறுவது என கமல் மிகப்பெரும் கலைஞன். கமலின் ஒவ்வொரு நரம்பிலும், ஒவ்வொரு துளி ரத்தத்திலும் கலை ஓடுகிறது. அதனால்தான் இன்றளவும் கமல் மீது பலருக்கு வெறுப்பு இருந்தாலும் அவரை ரகசியமாக ரசிக்கவும் செய்கிறார்கள் அவர்கள். அந்தவகையில் கமல் எப்போதும் ஒரு அதிசயமே.

சினிமா மட்டுமின்றி கவிதை எழுதுவது, பாடுவது, பாடல் எழுதுவது என கமல் இறங்காத கிரவுண்ட் இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பன்முகத்திறமை  என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் கமல் ஹாசன்.

கமல் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். அந்தவரிசையில் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ““நீங்க படிக்க நான் சில புத்தகம் தருவதிலிருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம்,நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கலன்னு!”சொல்லிக் கொடுத்தேன். அள்ளிக்கொடுத்தார் அன்பை! கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.