புதுடில்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீடு செல்லும் எனவும், இரு நீதிபதிகள் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமைவதாக கூறி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில் இன்று (நவ.,7) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அமர்வில் உள்ள நீதிபதிகள் தனித்தனியாக தீர்ப்பை வாசித்தனர். அதில் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி, பர்திவாலா ஆகிய 3 நீதிபதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோர் இதற்கு எதிரான என தீர்ப்பை அளித்தனர்.
3 நீதிபதிகளின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: 50 சதவீத உச்ச வரம்பு என்பதை 10 சதவீத இடஒதுக்கீடு இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு, அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது. 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை. எனவே பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும். இவ்வாறு தீர்ப்பளித்தனர்.
நீதிபதி ரவீந்திர பட் அளித்த தீர்ப்பில், ’10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே இந்த இடஒதுக்கீடு செல்லாது’ என தெரிவித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தரப்பும் அதே தீர்ப்பை அளித்தார். இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என ஆதரவாகவும், இரு நீதிபதிகள் மட்டும் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement