மைசூரில் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி சாலையில் வாக்கிங் சென்றபோது கார் ஏற்றி கொல்லப்பட்டார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை மைசூரு பல்கலைக்கழகத்தின் மானஸகங்கோத்ரி வளாகத்தில் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஆர்.கே குல்கர்னி வாக்கிங் சென்றபோது கார் ஏற்றி கொல்லப்பட்டார். முதலில் இதனை விசாரித்த போலீசார், கார் விபத்து என கருதினர். ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபிறகு அது திட்டமிட்ட கொலை எனக் கணித்துள்ளனர். குறிப்பாக அதிகாரி ஏற்றிக் கொல்லப்பட்ட காரில் நம்பர் ப்ளேட் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
இந்த வழக்கில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை போலீசார் காவலில் வைத்துள்ளனர். மேலும் குல்கர்னியின் அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மைசூரு போலீஸ் கமிஷ்னர் டாக்டர் சந்திரகுப்தா கூறுகையில், ’’குர்கர்னியின் குடும்பத்தார் பக்கத்து வீட்டுக்காரர்மீது புகாரளித்துள்ளனர். பக்கத்து வீட்டுக்காரர் கட்டடம் எழுப்ப குர்கர்னியின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டிருக்கிறது.
23 வருடங்களுக்கு முன்பு குல்கர்னி உளவுத்துறையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். அவரது கொலைக்கும் வேலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து எந்த விவரமும் இதுவரை இல்லை. எனவே அவரது பக்கத்து வீட்டாரிடம் விசாரணை நடத்திவருகிறோம். இது விபத்து அல்ல. திட்டமிட்ட கொலை என்பது சம்பவ இடத்திற்குச் சென்று நடத்திய விசாரணைக்குப் பிறகு தெரியவந்திருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
சாலையோரம் வாக்கிங் சென்றுகொண்டிருந்த 82 வயது அதிகாரியை நோக்கி வேகமாக வந்த கார், அவரை அடித்து தூக்கிவிட்டு அங்கிருந்து செல்கிறது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக உளவுத்துறையில் பணிபுரிந்த குல்கர்னி 23 வருடங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM