புழல் அரசு பள்ளியில் செயற்கைகோள் தயாரிக்க 2 மாணவர்களுக்கு பயிற்சி

புழல்: புழல் அரசு பள்ளியை சேர்ந்த 2 மாணவர்களுக்கு ஐஎஸ்ஆர்ஓ மூலமாக செயற்கைகோள் தயாரிக்க முறையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட பயிற்சி முடித்து திரும்பிய மாணவர்களை கல்வி அதிகாரிகள் பாராட்டினர். ஐ.நா.சபையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், இந்தியாவின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா ஆண்டில், 75 மாணவர்களின் செயற்கைகோள்களை ஏவுதலே தேசத்தின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அக்கருத்துக்கு செயல்வடிவம் தரும் வகையில், திருமுல்லைவாயல் அகத்தியம் அறக்கட்டளை உள்பட பல்வேறு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, 26 மாவட்டங்களை சேர்ந்த 86 அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சுற்றுச்சூழல் செயற்கைகோள் உருவாக்கி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தில் பயிற்சி பெறுவதற்காக புழல், காந்தி தெருவில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் லேனேஷ்வர், பிரகதீஷ் என்ற 2 மாணவர்கள் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செயற்கைக்கோள் குறித்து இணையவழியே பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றன.

இப்பயிற்சியின்போது 2 அரசு பள்ளி மாணவர்களும் இணையவழியே டாக்டர் ஏ.சிவதாணு பிள்ளை, ஆர்.எம்.வாசகம், முனைவர் இளங்கோவன், டாக்டர் ஆர்.வெங்கடேசன் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் தமிழிலேயே கலந்துரையாடினர். இந்தியாவின் முதல் மாணவ செயற்கைக்கோளான அகஸ்தியர் இங்கேயே வடிவமைக்கப்பட்டு, ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோளை பெங்களூரில் உள்ள ஐடிசிஏ குழுமம், டாக்டர் ஏ.சிவதாணு பிள்ளை குழுவினரின் தலைமையில் விரைவில் விண்ணில் செலுத்தவுள்ளனர்.

இந்நிலையில், செயற்கைக்கோள் தயாரிப்பில் முதல்கட்ட பயிற்சி முடித்து திரும்பியுள்ள 2 அரசு பள்ளி மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி, புழல் வட்டார கல்வி அலுவலர்கள் முனிராஜ் சேகர், பால் சுதாகர், ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.