அகமதாபாத்: குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்து குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிந்துள்ள அம்மாநில உயர் நீதிமன்றம், இவ்விஷயத்தில் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் கடந்த அக்டோபர் 30-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மீது சுமார் 500 பேர் இருந்துள்ளனர். இவர்களில் பலர் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தனர். இதில், ஆற்றுக்குள் மூழ்கி 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட ஒவேரா குழுமத்தின் அஜந்தா நிறுவன மேலாளர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில காவல் துறை அறிவித்தது.
இந்நிலையில், தீபாவளி விடுமுறைக்குப் பிறகு இன்று கூடிய குஜராத் உயர் நீதிமன்றம், இந்த விபத்து குறித்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. விபத்து தொடர்பாக மாநில உள்துறை, நகர்ப்புற வீட்டு வசதி துறை, மாநகர ஆணையர், மனித உரிமை ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், இந்த விபத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றப் பணிகள் தொடங்கும் முன், மோர்பி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.