மதுரை சிம்மக்கல் மணி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் அஸ்வினி (2). வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வீட்டில் கிடந்த அலுமினிய பாத்திரத்துக்குள் குழந்தையின் தலை மாட்டிக்கொண்டது. இதனால் அஸ்வினி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாள். இதனை கண்டு சிறுமியின் பெற்றோர் செய்வதறியாது துடிதுடித்தனர்.
மேலும், சிறுமியின் தலை சட்டிக்குள் இருந்ததால் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக்கண்டு மேலும் பெற்றோர் திகைத்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு சிறுமியின் தலையில் இருந்து சட்டியை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் எதுவும் பலனளிக்கவில்லை.
இறுதியாக, பெற்றோர் சிறுமியை மதுரை தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு சிறிய அளவிலான கத்திரிக்கோலை கொண்டு சிறுமியின் தலையில் மாட்டிக்கொண்ட சட்டியை லாவகமாக வெட்டினர்.
பின்னர் பத்திரமாக சிறுமியை மீட்டனர். இதைத் தொடர்ந்து சிறுமி மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.