பருக்காபாத் : உத்தர பிரதேசத்தில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்ததால் தன் சகோதரி மற்றும் அவருடைய காதலனைக் கொன்ற இளைஞர், போலீசில் சரணடைந்தார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பரூக்காபாதைச் சேர்ந்த நீது என்ற இளைஞர் போலீசில் நேற்று சரணடைந்தார்.
குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதலித்ததால், தன் சகோதரி ஷிவானி, 23 மற்றும் அவருடைய காதலன் ராம்கரணை, 25, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக அவர் போலீசில் தெரிவித்தார்.
அவர் கொடுத்த தகவலின்படி, கால்வாயில் வீசப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் மற்றொரு ஆணவக் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
காஜியாபாதின் இஸ்லாம் நகரில் வசித்த, 19 வயது இளம் பெண், வேறொரு ஜாதியைச் சேர்ந்தவரை காதலித்துள்ளார். இதற்கு, அந்த பெண்ணின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண் உயிரிழந்தார்; அவருடைய உடலை அவசர அவசரமாக எரியூட்ட முயன்றனர்.
அந்தப் பெண்ணின் காதலன் கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, காஜியாபாதில் இருந்து தப்பிக்க முயன்ற, அந்தப் பெண்ணின் இரண்டு சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுடைய தாய் தலைமறைவாக உள்ளார்.
குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதலித்த தால், தலையணையால் அழுத்தி சகோதரியை கொலை செய்ததாக, சகோதரர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆணவக் கொலை குறித்து காஜியாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்