அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கவுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவரது உடல்நிலையைப் பொறுத்து கலந்துகொள்வார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். அந்த யாத்திரை திங்கள்கிழமை இரவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைய இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற இருக்கும் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும், சிவசேனா அணியின் தலைவர்களில் ஒருவரான உத்தவ் தாக்கரேவிற்கும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அவர்களும் யாத்திரையில் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தனர்.
காய்ச்சல், பிற உடல்நல பாதிப்புகள் காரணமாக சமீபத்தில் சரத் பவார் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சனிக்கிழமை ஷீரடியில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் மருத்துவர்களின் உதவியுடன் சிறிது நேரம் மட்டும் சரத் பவார் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான அசோக் சவான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சரத் பவாரின் திட்டங்களில் மாற்றம் இருக்கும் என்று கருதுகிறேன். அவர் நவம்பர் 10- ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன். அதுவும் அவரின் உடல்நிலையைப் பொறுத்தே அமையும்” என்றார்.
மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரை: கடந்த செப்.7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற நடைபயணத்தைத் தொடங்கினார். யாத்திரையில் தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா வழியாக தெலங்கானா சென்றது. திங்கள்கிழமை தெலங்கானாவில் இருந்து, நாந்தேட் வழியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழைகிறது.
இதனைத் தொடர்ந்து நாந்தேட் மாவட்டம், டெக்ளூரில் உள்ள சத்திரபதி சிவாஜி சிலை அருகில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் கையில் ஒற்றுமை விளக்கு ஏந்தி யாத்திரையை தொடங்க இருக்கின்றனர். இரவுக்குப் பின், டெக்ளூரில் உள்ள குருத்வாரா சென்று நிறைவடைகிறது. பின்னர் செவ்வாய்கிழமை மீண்டும் யாத்திரை தொடங்க இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், அம்மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாதி கூட்டணியின் ஒற்றுமையை வெளிக்காட்ட இந்திய ஒற்றுமை யாத்திரையில் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான சிவசேனா கட்சிகளின் பங்கேற்பை முன்னிலைப்படுத்த மாநில காங்கிரஸ் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.