பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீடு சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு அளித்துள்ளனர்.
பெரும்பான்மை நீதிபதிகள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் உறுதியாகியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இட ஒதுக்கீடு கொள்கைக்கு முன்னோடியாக திகழும் தமிழகத்தை பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என விசிக அறிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படும் நிலையில், அதை போக்குவதற்காக நடவடிக்கைகள் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அவற்றை பாமக ஆதரிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை
காங்கிரஸ்
கட்சி வரவேற்றுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
“2005-06 ஆண்டில் மன்மோகன் சிங் அரசுதான் இதற்கான முன்னெடுப்பை எடுத்தது. சின்ஹோ ஆணையம் இது தொடர்பான அறிக்கை 2010இல் சமர்பித்தது. அதன்பிறகு, பரவலான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, 2014இல் மசோதா தயாராகி விட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு சட்டவடிவம் கொடுக்க மோடி அரசுக்கு ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது.” எனவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ள நிலையில், சமீபத்திய சாதிவாரிய கணக்கெடுப்பில் மோடி அரசு தனது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.