தஞ்சாவூரை சேர்ந்த ஜீவாகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தின் 11 வது பெரிய நகரமாகவும், அதிக மக்கள் வாழும் பகுதியாகவும் தஞ்சாவூர் உள்ளது,
தென்னிந்தியாவின் சிறப்புமிக்க கலை மற்றும் கட்டிடக்கலையின் ஆதாரமாக தஞ்சாவூர் உள்ளது. மேலும் இங்கு சோழர்கள் கட்டிய பழமையான கோவில்கள், பிரசித்தி பெற்ற மசூதிகள், தேவாலயங்களும் உள்ளன. தமிழகத்தின் முக்கியத்துவம் கொண்ட சுற்றுலாத் தலமாக தஞ்சாவூர் திகழ்ந்து வருகிறது.
மேலும் தமிழகத்தின் டெல்டா தலைநகரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறும் பகுதியாகவும், பட்டுத்துணி தயாரிக்கும் தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். 5 பல்கலைக்கழகங்களும், 15 கல்லூரிகளும் தஞ்சாவூரில் உள்ள நிலையில் அதிகளவில் மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் மட்டுமே சென்னைக்கு ரயில் போக்குவரத்து உள்ளது. தஞ்சாவூருக்கு ரயில் போக்குவரத்து முறையாக இல்லாததால் வணிகர்கள், மாணவர்கள், விவசாயிகள் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.
இரவு நேரத்தில் சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர். பகல் நேரங்களில் ரயில் இயக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு பகல் நேரங்களில் ரயில்களை இயக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,மனுதாரர் ரயில் இயக்க கோரி 2014 இல் மனு அளித்துள்ளார். தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி, அப்படி மனு ஏதேனும் அளித்திருந்தால் அந்த மனுவின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.