இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து வயதினருக்கும் அன்றாட வாழ்வில் அவசியமான டிஜிட்டல் சாதனங்கள் பல உள்ளன. ஸ்மார்ட்போன் தொடங்கி பல்வேறு பணிகளை மேற்கொள்ள அவரவர் தேவைகளுக்கு ஏற்ப அது மாறுபடும். இந்தச் சூழலில் மழைக்காலம் இப்போது தொடங்கி உள்ளது. இருந்தாலும் வாட்டர் ப்ரூப் இல்லாத சாதனங்களுக்கு மழையினால் என்னவோ சேதாரம்தான். இந்நிலையில், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேட்ஜெட்களை மழைக்காலங்களில் பாதுகாப்பதற்கான சில ஸ்மார்ட்டான டிப்ஸ் இதோ…
‘நான் வரலைன்னா வரல வரலனு சொல்லி திட்டுவீங்க. வந்தாலும் ஏன் வந்தேன்னு திட்டுவீங்க’ என்பது மழையின் மைண்ட்வாய்ஸாக இருக்கலாம். அதுவும் மழை நேரங்களில் போர்டபிள் எலக்ட்ரானிக் சாதனங்களான ஸ்மார்ட்போன், இயர் பட், பவர் பேங்க், டேப்லெட் போன்றவற்றை எடுத்து செல்பவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான். அதனால் அவர்களது மைண்ட்வாய்ஸ் வேறு விதமாக இருக்கும். இந்த சாதனங்களுக்கு தண்ணீரில்தான் கண்டம். இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இதை தவிர்க்கலாம். அதன் மூலம் அந்த சாதனங்களை மழை நீரில் இருந்து பத்திரமாக பாதுகாக்க முடியும்.
ஜிப் லாக் பவுச்களை பயன்படுத்தலாம்: சிலர் இது குறித்து அறிந்திருக்க வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட நம் செல்போன் உட்பட சிறிய ரக எலக்ட்ரானிக் பொருட்களுக்கான ரெயின் கோட் என இதனை சொல்லலாம். உணவு டெலிவரி செய்யும் பிரதிநிதிகள் மற்றும் ஆன்லைன் டெலிவரி பிரதிநிதிகள் மழை நேரங்களில் தங்கள் கழுத்தோடு இந்த பவுச்களை மாட்டி இருப்பார்கள். அதுதான். இதன் விலை சுமார் 50 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 200 ரூபாய் வரை உள்ளது. இதனை கையில் எடுத்து செல்வதும் சுலபம். இதில் ஸ்மார்ட்போன்களை வைத்தால் மழை நேரங்களிலும் திரையை பயனர்களால் சிரமமின்றி பயன்படுத்த முடியும். உள்ளூரில் உள்ள மொபைல் போன் அக்சசரிஸ் கடைகள் மற்றும் மின்னணு வணிக தளங்களிலும் இது விற்பனைக்கு கிடைக்கிறது.
பைகளில் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகளை வைத்துக் கொள்ளலாம்: பெரும்பாலும் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது ஆர்டர் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பார்சலுக்குள் சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் இருக்கும். இருந்தாலும் அதன் பயன் என்ன என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட்டுகள் ஈரத்தை விரைவாக இழுக்கும் தன்மை கொண்டவை. அதனால் இதனை நாம் சுமந்து செல்லும் பைகளில் வைத்துக் கொள்ளலாம். இந்த பாக்கெட்டுகளின் நிறம் மாறினால் அதை மாற்றலாம்.
ஈரமாக உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்ய வேண்டாம்: மழை நேரங்களில் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஈரமாக இருந்தால் சார்ஜ் செய்ய வேண்டாம். சிலிக்கா ஜெல் பயன்படுத்தி ஈரப்பதத்தை நீக்கலாம்.
வாட்டர் ப்ரூப் திறன் கொண்ட பேக் பயன்படுத்தலாம்: பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது வாட்டர் ப்ரூப் திறன் கொண்ட பேக்தான். இருந்தாலும் அதில் தண்ணீர் பட்டால் உள்ளே உள்ள பொருட்களின் நிலை என்ன என்பதை ஒரு முறை வெள்ளோட்டம் பார்த்துக் கொள்ளலாம். தரம் இல்லை எனில் முன்கூட்டியே வாட்டர் ப்ரூப் கொண்ட பைகளை வாங்கிக் கொள்ளலாம்.
அதே போல ஈரப்பதம் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை ஸ்விட்ச் ஆப் செய்து வீட்டில் உள்ள அரிசியில் வைக்கலாம். அது ஈரத்தை உறிஞ்சும்.