குப்பைக் கிடங்கு பகுதிகளில் காற்று மாசு பாதிப்பு: மக்களின் புரிதலும், தமிழக அரசின் கடமையும்

உலக நாடுகளில் காற்று மாசு மிக முக்கியப் பிரச்சினையாக மாறி வருகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 42 லட்சம் மரணங்கள் பதிவாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை எடுத்துக்கொண்டால், டெல்லியில் காற்று மாசு மிக முக்கியப் பிரச்சினையாக மாறி வருகிறது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதன் காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து நாடுகளும் காற்று மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

காற்று மாசு அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்றாலும் தொழிற்சாலைகள், குப்பைக் கிடங்குகள் ஆகியவற்றுக்கு அருகில் வசிப்போர் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக ,சென்னையில் மணலி, கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களைச் சுற்றியுள்ள மக்கள் அதிக அளவு காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, காற்று மாசு, அதனால் ஏற்படும் பாதிப்புகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இந்தப் பகுதி மக்களுக்கு அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஆய்வு ஒன்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் அரிகரநாதன் மற்றும் பிரியா செந்தில் குமார் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள குப்பைக் கிடங்கைச் சுற்றி வசிக்கும் மக்கள் காற்று மாசு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை எந்த அளவுக்கு தெரிந்து வைத்துள்ளனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 93 குடும்பங்களிடம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் :

  • 25 சதவீத குடும்பங்கள் காற்று மாசு தொடர்பாக நல்ல அறிவை பெற்றுள்ளனர்.
  • 55 சதவீத குடும்பங்கள் காற்று மாசு தொடர்பாக சராசரி அறிவை பெற்றுள்ளனர்.
  • 82 சதவீத மக்கள் காற்று மாசு காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தெரிந்துவைத்துள்ளனர். ஆஸ்மா, நுரையீரல் புற்று நோய், தோல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் காற்று மாசு காரணமாக ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.
  • 35 சதவீத மக்கள் முகக்கவசம் அணிந்தால் பாகாகாப்பு இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
  • 72 சதவீத குடும்பங்கள் குப்பைக் கிடங்குகள்தான் காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

பரிந்துரைகள்:

  • அதிக மாசு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • குப்பைக் கிடங்குகளை சுற்றி 2 கி.மீ சுற்றளவில் தண்ணீர் மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் அமைக்க தடை செய்ய வேண்டும்.
  • அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் தினசரி மருத்துவப் பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
  • அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.